விராலிமலை தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் ‘அழுகாச்சி’ பிரச்சாரம்: ‘எனக்கும் பி.பி, சுகர் இருக்கு’ – விஜயபாஸ்கர்; ’எனக்கு இறுதி வாய்ப்பு’ – பழனியப்பன்

புதுக்கோட்டை மாவட்டம்விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளரும், மாநில மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கருக்கும், திமுக வேட்பாளர் எம்.பழனியப்பனும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இத்தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் 2011, 2016 என தொடர்ச்சியாக 2 முறை வெற்றி பெற்று, 3-வது முறையாக களம் காண்கிறார். திமுக வேட்பாளர் பழனியப்பனும் இதே தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டாலும், அவர் 2011 தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு கணிசமான வாக்குகளுடன் 3-வது இடத்தை பிடித்தார். அதன்பின் திமுகவில் சேர்ந்த பழனியப்பன், 2016 தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு 8,447 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபாஸ்கரிடம் தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில், இந்தத் தேர்தலிலும் இருவரும் 3-வது முறையாக மோதும் நிலையில், தொடக்கத்தில் இருந்தே தேர்தல் களம் நெருக்கடியாகவே இருந்து வருகிறது. அதற்கேற்ப, 2 வேட்பாளர்களும் தினம் தினம் பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் ‘‘கடந்த 2 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியதால் பொருளாதார ரீதியாக அனைத்தையும் தொகுதி மக்களுக்காக இழந்துவிட்டேன். எனக்கென இருப்பது ஒரு வீடும், ஒரு பெட்ரோல் பங்க்கும்தான். இந்த தேர்தலில் அவை இரண்டையும் இழந்தாலும், எனது உயிரினும் மேலான மக்களை இழக்கத் தயாராக இல்லை. கட்சியில் இறுதியாக எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நான் யாரிடமும் ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்க மாட்டேன். எனவே, எனக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். உங்களுக்காக உழைக்கவும் தயாராக உள்ளேன்’’ என உருக்கமாகப் பேசி, கண்ணீர் சிந்தி திமுக வேட்பாளர் பழனியப்பன் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, வாக்காளர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால், அமைச்சர் விஜயபாஸ்கரும் தன் பங்குக்கு, தான் ஆற்றிய சேவைகள் குறித்து பிரச்சாரத்தின்போது கண்ணீர் மல்க உருக்கமாக பேசி வருகிறார்.

அவர் பேசும்போது, ‘‘நானும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த தொகுதியை சுமந்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளேன். இயற்கை இடர்படான காலங்களில் ஓடி ஒதுங்கி இருக்காமல் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்திருக்கிறேன். எனக்கும் ‘பிபி, சுகர்’ போன்ற நோய்களும் உள்ளன. எனக்கும் பல கஷ்டங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் தொகுதி மக்களிடம் நான் காட்டுவதில்லை. அதையும் கடந்து மக்களுக்காக நாள்தோறும் உழைத்து வருகிறேன்’’ என கண்ணீர் சிந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கண்ணீர் மல்க பிரச்சாரம் செய்வது விராலிமலை தொகுதியில் உச்சகட்ட கிளைமாக்ஸை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே