தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!

கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சீனா, அமெரிக்கா, ஈரான், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருதை தொடர்ந்து மார்ச 22ம் தேதி இந்தியா முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தாங்களாக முன்வந்து ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனைப்போல நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 400 ஆக உயர்ந்தது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இன்று சட்டப்பேரவையில் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்படுவருவதாக குறிப்பிட்டார். 

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மாலை 6 மணி முதல், தமிழகத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படும் என அறிவித்தார். மேலும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துகளுக்கும் தடை விதித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். 

மேலும் அடிப்படை பொருட்களுக்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்றும்; அத்தியாவசிய பொருட்களான காய்கறி, இறைச்சி, மளிகை மற்றும் மருந்து கடைகள் மட்டும் இயங்கலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க இந்த அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி கோரிக்கைவிடுத்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே