புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது அரசு மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரினார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 7 பேரும், அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும், நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் அவைக்கு வந்துவிட்டனர்.

எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 14 பேரும் இருக்கையில் அமர்ந்து விட்டனர்.

சபாநாயகர் சிவக்கொழுந்து அவையை தொடக்கிவைத்தார்.

காங்கிரஸ் கட்சி தனது முடிவை சட்டப்பேரவையில் அறிவிக்கும் என நாராயணசாமி கூறியிருந்த நிலையில் தற்போது அவர் உரையாற்றி வருகிறார்.

அவர் அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரியுள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு காங்கிரஸில் 15, திமுகவில் 3, சுயேட்சை எம்எல்ஏ என 19 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. காங்கிரஸிலிருந்து தனவேலு எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், தீப்பாய்ந்தான், ஜான்குமார், லட்சுமி நாராயணன் ஆகிய 5 பேரும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டனர்.

இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 9 ஆனது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏவான வெங்கடேசனும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இன்று சட்டப்பேரவையில் ஆளும்கட்சி பெரும்பான்மையை நிருபிக்க வாக்கெடுப்பு நடக்க உள்ளசூழலில் காங்கிரஸ் கூட்டணியில் வரிசையாக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்கின்றனர்.

ஏற்கெனவே பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் எம்எல்ஏக்கள் விலகல் பற்றி தெரிவித்திருந்த சூழலில் இந்த ராஜிநாமாக்கள் நடக்கிறது.

அடுத்தடுத்த திருப்பதால் காங்கிரஸ் தவிப்பில் உள்ளது.

இச்சூழலில் காங்கிரஸ்-திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.

அதன்படி இன்று காலை முடிவு எடுக்கப்பட உள்ளது.

தற்போது ஆளுங்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 9, திமுக-2, சுயேட்சை 1 என 12 பேரே உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்7, அதிமுக 4, நியமன எம்எல்ஏக்கள் (பாஜக)-3 என 14 பேர் உள்ளனர்.

நியமன எம்எல்ஏக்களுக்கு பேரவையில் அனுமதி

புதுவை சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் தங்களுக்கு பெரும்பான்மை உள்ள கோணத்தில் அணுக காங்கிரஸ் கூட்டணி திட்டமிட்டது.

இதனால், சட்டப்பேரவையில் நடைபெறும் பலப்பரீட்சையில் நியமன எம்எல்ஏக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருக்கைகள் மாற்றம்:

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் விலகலுக்கு பிறகு சட்டப்பேரவையில் இருக்கைகளை மாற்றி அமைத்து சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில் எதிர்கட்சி வரிசையின் இறுதியில் நியமன பாஜக எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வணபதி, தங்கவிக்ரமனுக்கு அடுத்தடுத்த இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பாஜக நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கேற்க வருமாறு சட்டப்பேரவைச் செயலாளர் முனுசாமி எஸ்எம்எஸ் மூலம் அழைப்பும் விடுத்துள்ளார்.

சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து கடிதமும் அனுப்பபட்டுள்ளது. அதோடு சட்டசபை அலுவல் பட்டியலில் ஒரே ஒரு அலுவலாக நம்பிக்கை கோரும் பிரேரனை மட்டுமே இடம் பெற்றுள்ளது.

அதிலும், விவாதம் என இடம் பெறவில்லை. இதனால், சபையில் விவாதமின்றி நேரடியாக வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகிறது.

இருப்பினும், சட்டப்பேரவையை பொருத்தவரையில் சபாநாயகரின் முடிவே இறுதியானது ஆகும்.

புதுவையில் அடுத்தடுத்து நிகழும் அரசியல் திருப்பங்கள், ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பலப்பரீட்சை ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே