சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் என, அக்கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை, தொல்.திருமாவளவன், புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இன்று (ஜன. 02) சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் ஆகியோர் உடனிருந்தனர்.

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “2021 புதிய ஆண்டில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தோம். 

புதுச்சேரி மாநிலத்தில் தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை கட்டணம் இல்லாமல் கல்வி கற்க தற்போது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2018, 2019, 2020 அமைச்சரவையில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றி, இன்று அது வெற்றிகரமாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது நீண்ட நாள் கோரிக்கை.

இந்தியாவிலேயே கல்வி கட்டணம் இல்லாமல் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் கல்வி கற்க ஒரு நல்லதொரு அரசாணையை பிறப்பித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக சிறந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த திட்டத்தை ஓபிசி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை வைத்திருக்கிறோம். இதை பரிசீலனை செய்வதாக முதல்வரும் உறுதி அளித்திருக்கிறார்.

2020-ம் ஆண்டு அனைவருக்கும் துக்கம், துயரம் நிறைந்த ஆண்டாக மனித உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது.

2021-ம் ஆண்டு அவ்வாறு இல்லாமல் மனிதகுலம் நிம்மதியாக வாழ ஏற்றதாக அமைய வேண்டும். 2021-ம் ஆண்டு சனாதன சக்திகளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கால் ஊன்ற விடாமல் பாதுகாக்க உறுதி ஏற்போம்.

இந்த ஆண்டு அதற்கான ஆண்டாக மலரும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக மீதும், அதன் கூட்டணியின் மீதும் குற்றம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.

அதனால் திமுக வாரிசு அரசியல் செய்கிறது என அதிமுகவினர் தொடர்ச்சியாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும்” எனத் தெரிவித்தார்.

முதல்வர் நாராயணசாமி கூறும்போது, “புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக படிப்பதற்கான திட்டத்தை எங்களது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம்.

இதற்காக 2018, 2019, 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். இதற்கு ஆளுநர் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்கு அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே