முதல்வர் பழனிசாமி சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முதல்வர் பழனிசாமி நேற்று முன் தினம் காலை சேலத்திலிருந்து சென்னை வந்தார்.

பின்னர் தமிழகத்தில் உள்ள கரோனா தொற்று நிலை, அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்குறித்து சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அவர் அன்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நேற்று முன் தினம் மாலை ஊரடங்கு, கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியானது.

இந்நிலையில் நேற்று காலை முதல்வர் பழனிசாமி அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதால் ஏற்கெனவே திட்டமிட்டப்படி அறுவை சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் முன் அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று எதுவும் இல்லை என்பது உறுதியானது. அறுவை சிகிச்சைக்குப்பின் 3 நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தங்கி ஓய்வெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்கள் எவ்வித பணியும் மேற்கொள்ளாமல் பூரண் ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து 3 நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பார் என்று கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே