விராட் கோலி தலைமையில் இந்திய அணி விளையாடிய நான்கு டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் ஒரு கேப்டனாக நெருக்கடியில் உள்ளார் கோலி.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி மிகச்சிறப்பாக விளையாடி 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்கியுள்ளது.
அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது.
இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது.
ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இதில் கடைசி நாளன்று கடினமான இலக்கை விரட்டி டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி. முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது கோலி தலைமையிலான இந்திய அணி.
அதன்பிறகு ரஹானே தலைமையில் விளையாடிய இந்திய அணி, மெல்போர்ன் டெஸ்டை வென்றது.
சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது.
4-வது டெஸ்டில் கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவில் கோலி தலைமையிலான இந்திய அணி, முதல் டெஸ்டில் தோற்றது.
இதன்பிறகு மீதமுள்ள மூன்று டெஸ்டுகளுக்கும் தலைமை தாங்கி 2-1 எனத் தொடரை வென்று கொடுத்தார் ரஹானே.
இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு ரஹானே கேப்டனாக இருக்க வேண்டும் எனப் பலரும் விருப்பம் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் சென்னை டெஸ்டிலும் கோலி தலைமையிலான இந்திய அணி தோற்றுள்ளது.
இதனால் கோலி தலைமையில் கடைசியாக விளையாடிய 4 டெஸ்டுகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளதால் கோலிக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் பிப்ரவரியில் நியூசிலாந்துடன் விளையாடிய 2 டெஸ்டுகளிலும் இந்திய அணி தோற்றது.
வெலிங்டன் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்திலும் கிறைஸ்ட்சர்ச் டெஸ்டை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது நியூசிலாந்து அணி.
இதன்பிறகு ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி. இதனால் அந்த டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.
தற்போது சென்னை டெஸ்டை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி.
இவை எல்லாமே கோலி தலைமையில் கிடைத்த தோல்விகள்.
ரஹானே தலைமையேற்ற ஐந்து டெஸ்டுகளில் ஒருமுறை கூட இந்திய அணிக்குத் தோல்வி கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்டுகளில் மூன்றில் வெற்றியும் ஒரு டெஸ்டில் டிராவும் கிடைத்துள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் வெற்றி கிடைத்துள்ளது. கடினமான சூழல்களில் இந்திய அணிக்குத் தலைமையேற்று வெற்றிகளை வழங்கியுள்ளார் ரஹானே.
ஆனால், அணித்தேர்வில் கோலி சில தவறுகள் செய்வதால் அதுவே தோல்விக்கு முக்கியக் காரணமாகிவிடுகிறது.
இதனால் கடைசி 4 டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ள கோலி, அடுத்து வரும் மூன்று டெஸ்டுகளிலும் வென்று தனது திறமையை நிலைநாட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
டெஸ்ட் தொடரை இரு வெற்றிகள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணியால் தகுதி பெற முடியும்.
டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனால் ரஹானேவுடனான ஒப்பீடுகளுடன் கடுமையான விமரிசனங்களை கோலி எதிர்கொள்ள நேரிடும்.
இதனால் அடுத்து நடைபெறவுள்ள மூன்று டெஸ்டுகளுக்கும் விராட் கோலியின் தலைமைப்பண்பைச் சோதிப்பதாகவே அமையும்.