சென்னை : தனியார் தடகள அகாடமி பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு..!!

விளையாட்டு வீராங்கணைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘ஆன்லைன்’ வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (வயது 59) கைது செய்யப்பட்டார். ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

இது ஒருபுறம் இருக்க பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்கள் அளிக்கலாம் என்றும், அவர்களது பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும், தன்னுடைய புகாரை 94447 72222 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமி கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது செல்போன் எண்ணிற்கு தினமும் ஏராளமான அழைப்புகள் வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள் என சுமார் 30 பேர் தங்கள் ஆசிரியர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக புகார் தெரிவித்ததாகவும், சென்னையில் மட்டும் 10 பேர் புகார் கூறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விளையாட்டு வீராங்கணைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் தடகள பயிற்சியாளர் நாகராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தடகள விளையாட்டு வீராங்கணைகள் சமூகவலைதளத்தில் புகார்கள் தெரிவித்திருந்தனர். புகாருக்கு உள்ளான நாகராஜன் தமிழ்நாடு பிரைம் ஸ்போட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையத்தை சென்னை பாரிமுனையில் நடத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் சுங்கத்துறையில் உதவி ஆணையராகவும் வேலை செய்து வருகிறார். நாகராஜன் தமிழ்நாடு பிரைம் ஸ்போட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 

இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய விளையாட்டு திறமை உள்ள மாணவ\மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இங்கு பயிற்சிபெற்ற வீராங்கணைகள் மாநில, தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளனர். 

இந்த நிலையில், நாகராஜன் பயிற்சியின் போது தடகள விளையாட்டு மாணவிகள்\வீராங்கணைகளை பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், வீராங்களின் உடலை அத்துமீறி தொடுவது உள்ளிட்ட பாலியல் தொல்லைகளை அளித்துவந்ததாக சமூகவலைதளத்தில் புகார்கள் வந்தன. 

இந்த புகார் குறித்து சென்னை பாரிமுனையில் உள்ள பூக்கடை போலீசார் ஏற்கனவே நாகராஜனை நேரடியாக காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால், அவர் விசாரணைக்கு வரவில்லை.

இதனை தொடர்ந்து தற்போது தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதுவரை நாகராஜன் எங்கு இருக்கிறார். அவரது நிலைமை என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நாகராஜன் மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக விளையாட்டு வீராங்கணை ஒருவர் இதேபோல நாகராஜன் பாலியர் தொந்தரவு அளித்ததாக ஒரு புகார் அளித்தார். அந்த புகாரானது தமிழ்நாடு தடகள சங்கம் விசாரணை நடத்தி புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று புகார் முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் மற்றொரு பள்ளியான மகரிஷி வித்யாமந்திர் பள்ளி ஆசிரியரும் பாலியல் புகாருக்கு உள்ளாகி பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியர் புகார் எழுந்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே