அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் துணியை வைத்ததால் பெண் உயிரிழப்பு…!

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் தவறுதலாக துணியை வைத்ததால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து பிரியாவிற்கு வயிற்றில் அதிக வலி ஏற்பட்டதையடுத்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு பிரியா, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

பிரசவத்தின் போது வயிற்றில் மருத்துவர்கள் தவறுதலாக துணியை வைத்து தைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உறவினர்கள், பச்சிளம் கைக்குழந்தையுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர், பெண் உயிரிழப்பு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே