ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட, வருகிற திங்கட்கிழமை வரை, தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது, ஆபாச இணையத்தளங்கள் வருகின்றன.

எனவே, ஆன்லைன் வகுப்புக்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சரண்யா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

1- ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும். 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்குகளில் பதிலளித்த மத்திய அரசு, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.

1-ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை, தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும்.

9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் என நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மத்திய அரசினுடைய பரிந்துரைகளின்படி, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதா? அது தொடர்பான பதில் குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, வருகிற திங்கட்கிழமை வரை கால அவகாசம் வேண்டும் என்றும், அதற்குள் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே