உருமாற்றம் பெற்று பரவும் கொரானாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..!!

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அறிகுறி இல்லாத, குறைவான அறிகுறியோடு கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கொரோனா மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்று மாநகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரியங்கா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த உயர்நீதிமன்றம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடு மற்றும் அப்பகுதியில் தகரம் அடிக்கப்படுவதன் காரணம் என்ன?

எந்த விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் ஆகியவை பட்டியலிடப்பட்ட பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட வீட்டின் முன்பு தகரம் பொருத்துவதில்லை; ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பதையும் தமிழக அரசின் தலைமை கூடுதல் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து தமிழக அரசின் பதில்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அரசு, முன்கள பணியாளர்கள் மற்றும் வழக்கினை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த மனுதாரர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்ந்து உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோசமான விளைவுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மிகத்தீவிரமான கண்காணிப்பு மற்றும் திறமையான நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், கொரோனாவை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே