சென்னை: 72 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்து கொலை; 21 வயது கொடூரன் கைது

சென்னையில் 72 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை ராயப்பேட்டை ரோட்டரி காலனி 3வது தெருவை சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 72 வயது மூதாட்டியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. அரசு முதியோர்களுக்காக கொடுக்கப்படும் ஓய்வூதியத் தொகையான ஆயிரம் ரூபாய் மற்றும் அருகில் உள்ளவர்கள் கூலி வேலைக்கு கூப்பிட்டால் செல்வது போன்றவற்றால் தன்னுடைய பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பேசிவிட்டு 10 மணி அளவில் தூங்க சென்றுள்ளார். காலையில் சீக்கிரமாகவே எழுந்து விடும் மூதாட்டி இன்று காலைவெகு நேரமாகியும் கதவைத் திறக்காததால், அருகில் உள்ளவர்கள் அவரின் வீட்டினுள் சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் வெட்டுக் காயங்களும் மற்றும் கலைந்த ஆடைகளுடன் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்த ராயப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் மயிலாப்பூர் துணை ஆணையர் சஷாங் சாய் நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மூதாட்டியின் வீட்டிற்கு அருகில் உள்ள கூவம் வழியாக இருந்து ஒருவர் வீட்டிற்குள் நுழைவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த கூவத்தில் அடிக்கடி குதிரை ஓட்டும் நபர்கள் மது அருந்திவிட்டு செல்வது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரித்து உள்ளனர். விசாரணையில் நொச்சி குப்பத்தை சேர்ந்த வசந்தகுமார் (21) என்பவர் மீது கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாகி இருந்த வசந்தகுமாரை 6 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் வசந்தகுமார் போதையில் வரும்போது, மூதாட்டியின் வீட்டுக் கதவு திறந்துள்ளதை கண்டு பணத்தை திருட வீட்டிற்குள் புகுந்துள்ளார். வசந்தகுமாரை கண்ட மூதாட்டி சத்தமிட்டதால் வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்து அருகிலிருந்த கத்தியை எடுத்து கழுத்தை குத்தி கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த 1,300 ரூபாய் பணத்தை திருடிவிட்டி தப்பி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே