பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி (58) இன்று காலை பதவியேற்றார். இம்மாநிலத்தில் முதல்வரான முதல் தலித் சமூகத்தைச் சோந்தவா் இவா்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிா்ப்பை மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சண்டீகரில் உள்ள ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் இறுதியில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சரண்ஜீத் சிங் சன்னி தோந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி இன்று பதவியேற்றுக் கொண்டார். சண்டீகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும், பஞ்சாப் துணை முதல்வராக சுக்ஜிந்தர் ரன்தவாவும் பிரம் மொஹிந்த்ராவும் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்வில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நவ்ஜோத் சிங் சித்து, ஹரிஷ் ராவத் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே