அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
அதிமுக கட்சி விதிகளின் படி, புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது, பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆனால் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதன்பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டார்கள்.
இது அதிமுகவின் விதிகளுக்கு முரணானது என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது இருந்த விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை ஏற்ற தேர்தல் ஆணையம் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக உறுப்பினர், வழக்கறிகருமான ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உட்கட்சியில் தேர்தெடுக்கப்படும் தலைவர்கள், நிர்வாகிகள் குறித்து உள்ளே நுழைந்து ஆராய முடியாது என்றும் அவர்களின் பிரதிநிதிகள் அளிக்கும் பிராமண பத்திரத்தை ஏற்றுக்கொண்டு அனுமதி அளிப்பது, அளிக்காதது தேர்தல் ஆணையத்தின் முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஓங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றத்தில் தவறில்லை என்று கூறி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமனத்தை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.