தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

‘தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

டிஜிபி அலுவலகம் (சென்னை) 11 செ.மீ., மண்டபம் (ராமநாதபுரம்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தலா 6 செ.மீ., எண்ணூர் AWS (திருவள்ளூர்), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), பெரம்பூர் (சென்னை), வாலிநோக்கம் ARG (ராமநாதபுரம்), ஆலந்தூர் (சென்னை), ரெட்ஹில்ஸ் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 5 செ.மீ., பொன்னேரி (திருவள்ளூர்), பெரியகுளம் (தேனி), சோழிங்கநல்லூர் (சென்னை), சோழவரம் (திருவள்ளூர்), M.G.R நகர் (சென்னை), கூடலூர் (தேனி) தலா 4 செ.மீ., பாம்பன் (ராமநாதபுரம்), வானூர் (விழுப்புரம்), திருவள்ளூர், தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), ராதாபுரம் (திருநெல்வேலி) தலா 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை‘.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே