”மதுரை, விருதுநகர், சிவகங்கை உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்,” என்று தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நேற்று கிழக்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறக்கூடும்.
இந்த புயல் சின்னம் மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரையை விசாகப்பட்டினம் கோபால்பூர்க்கு இடையே கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (செப்.,25) மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.
நாளை 26ம் தேதி: தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்., 27ம் தேதி: தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமுதல் மிக கன மழையும், தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்., 28ம் தேதி: தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்., 29ம் தேதி: கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு :தேவகோட்டை (சிவகங்கை) 14 செ.மீ., மணப்பாறை (திருச்சி), சேரன்மாதேவி (திருநெல்வேலி) தலா 11 செ.மீ., மதுரை விமான நிலையம், முசிறி (திருச்சி) தலா 10 செ.மீ., குளித்தலை (கரூர்) 8 செ.மீ., திருமங்கலம் (மதுரை) 7 செ.மீ., வேடசந்துார் (திண்டுக்கல்), சத்தியமங்கலம் (ஈரோடு), வாடிப்பட்டி (மதுரை), கரூர், அவலஞ்சி (நீலகிரி) தலா 6 செ.மீ., அவிநாசி (திருப்பூர்), மன்னார்குடி (திருவாரூர்), கயத்தாறு (துாத்துக்குடி), அன்னுார் (கோவை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) தலா 5செ.மீ.,
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
நாளை 26ம் தேதி மற்றும் 27ம் தேதி: பலத்த காற்று மணிக்கு 45 முதுல் 55 கிலோமீட்டர் வேகத்தில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக்கடல் பகுதிகள்:
நாளை 26ம் தேதி மற்றும் 27ம் தேதி: பலத்த காற்று மணிக்கு 45 முதுல் 55 கிலோமீட்டர் வேகத்தில் கேரளா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.