அனைத்து காவல்நிலைய லாக் அப்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

பஞ்சாப் மாநிலத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரோஹிண்டன் நாரிமன், அனிருத்தா போஸ் அமர்வு விசாரித்து நேற்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்கள், சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்கத் துறை, தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை, நிதி புலனாய்வு துறை, தீவிர மோசடிகளை விசாரிக்கும்புலனாய்வு குழு (எஸ்எப்ஐஓ)மற்றும் இதர புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும்.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

இரவிலும் காட்சிகள் தெளிவாகபதிவாகும் சிசிடிவி கேமராக்களையே பொருத்த வேண்டும்.

ஆடியோ பதிவும் தெளிவாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 18 மாதங்கள் வரையிலான பதிவுகளை சேமிக்கும் வசதி இருக்க வேண்டும்.

அலுவலகத்தின் நுழைவு, வெளியேறும் வாயில்கள், பிரதானவாயில், அலுவலகத்தின் வெளிப்புறம், பின்புறம், லாக்-அப் அறைகள், வரவேற்பறை, இன்ஸ்பெக்டர் அறை, சப்-இன்ஸ்பெக்டர் அறை, கழிவறையின் வெளிப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய சுதந்திரமாக செயல்படும் குழுவை நியமிக்க வேண்டும்.

அந்த குழு அனைத்து காவல் நிலையங்களின் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வுசெய்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே