GODMAN WEBSERIES இயக்குநர், தயாரிப்பாளர் மீது போலீஸ் வழக்குப் பதிவு

சர்ச்சைக்குரிய ‘காட்மேன்’ வெப்சீரிஸ் தொடர்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன்.

இதை விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்தின் இயக்குனர் யோகேஸ்வரன் இயக்கி இருந்தார்.

ஜீ5 ஓடிடியில் ஜுன் 12ல் வெளியிட இருந்தனர். இதன் டீசர் கடந்த வாரம் வெளியானது.

அதில் இந்து கடவுள் நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும் பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தி வசனங்களும், ஆபாச காட்சிகள் நிறைந்தும் இருந்தது சர்ச்சையானது.

இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. 

இணையதளங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

சென்னை, மதுரை போன்ற நகரங்களில் போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும். வெப்சீரிஸ்களுக்கு சென்சார் வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.

இதையடுத்து அந்த டீசரை நீக்கினர். மேலும் இந்த தொடர் வெளியாகாது என ஜீ5 தரப்பில் கூறப்பட்டுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வெப்சீரிஸ் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர்.

இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார் காட்மேன் தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே