முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு..!! முழு விவரம்..!!

அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்திவருகிறார்கள். 

சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றுவருகிறது. அதேபோல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெங்களூரு போன்ற பகுதிகளிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் காந்திரோடு மற்றும் பார்த்தசாரதி தெருவிலுள்ள இரண்டு வீடுகள் மற்றும் ஆர்.எஸ்.மஹால் ஆகியவற்றில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

வீரமணியின் பல சொத்துகள் முதல் மனைவியின் தந்தை பெயரிலும், இரண்டாவது மனைவி பெயரிலும் இருக்கின்றன. திருமண மண்டபம் மற்றும் ஹோட்டல் பிசினஸில் அவருக்கு ஆர்வம் அதிகம் எனக் கூறப்படுகிறது. சுற்றுத்தலமான ஏலகிரி மலை, திருப்பத்தூர், ஓசூர் பைபாஸ் ஆகியப் பகுதிகளில் ஹைடெக்காக 3 ஹோட்டல்களையும் நடத்திவருகிறார்.

கே.சி.வீரமணி

அமராவதி, பெங்களூருவிலும் நட்சத்திர ஹோட்டல்களின் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. பேரணாம்பட்டில் வேளாண் கல்லூரி நடத்துகிறார்.

பெங்களூரிலும், சென்னையிலும் அவருக்கு பங்களா இருக்கிறது. அதுதவிர அப்பார்ட்மென்ட் ஒன்றும் இருக்கிறது. கோவையிலிருந்து கொச்சி செல்லும் பைபாஸில் லாரிகளுக்கு பாடி கட்டும் தொழிற்சாலை, ஆந்திராவில் இரண்டு பால் நிறுவனங்கள் ஆகியவை அவர் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க-வினர்.

இந்தநிலையில், வீரமணிக்குப் பணிப்பரிவர்த்தனை உள்ள இடங்களிலும், உதவியாளர்கள், பினாமிகளுக்குச் சொந்த வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி காட்டிவருகிறார்கள். ஜோலார்பேட்டையிலுள்ள வீடுகளில் நடைபெற்றுவரும் சோதனையின்போது, வீரமணியும் உடன் இருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் இனோவா காரில் வீரமணியை அமரவைத்துக் கொண்டு அவருக்குச் சொந்தமான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இந்தச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோலார்பேட்டையிலுள்ள வீரமணியின் வீட்டு முன்பு உறவினர்களும், அ.தி.மு.க-வினரும் குவிந்துவருகிறார்கள். தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் இடையூறுகள் ஏற்படாமல் இருப்பதற்காக உள்ளூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

கே.சி.வீரமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் 2011 ஆம் ஆண்டு வெறும் 7.48 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 76.65 கோடி ரூபாயை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

654%வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், 28,78,13,758 ரூபாயை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துள்ளார் எனவும் முதல் தகவல் அறிக்கையில் அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே