தொற்று நோய் பரவும் வகையில் கூட்டம் கூடியதாக 3 பிரிவுகளின் கீழ் 250 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக அவதூறான வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டு வருவதால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

இதனால் கறுப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதை தொடர்ந்து கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவர் புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் நேற்று சரண் அடைந்தார்.

சுரேந்திரனை புதுச்சேரி போலீசார், தமிழக போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் சென்னை அழைத்து வரப்பட்டார்.

இதனையடுத்து அவரிடம் சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை ஜூலை 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்திய பாஜகவினர் 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எழும்பூர் நீதிமன்றம் முன் தொற்று நோய் பரவும் வகையில் கூட்டம் கூடி போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதியப்பட்டுள்ளது.

முன்னதாக கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே