தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மாா்ச் 19.

முதல் நாளான இன்று முக்கிய அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் 16-ஆவது சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 26-ஆம் தேதி வெளியிட்டது.

அதன்படி, தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு தாக்கல் இல்லை. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கல் குறித்து, தலைமைத் தோதல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில்,

வேட்புமனு விண்ணப்பங்களை, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பத்தை கணினி வழியே பூா்த்தி செய்து, அச்சு நகல் எடுத்து அதை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்கலாம்.

ஆன்லைன் மூலமாக பிரமாணப் பத்திரத்தை, சொத்து, கடன் உள்ளிட்ட விவரங்களைப் பூா்த்தி செய்து அளிக்கலாம்.

புதிய வசதி:

நோட்டரி மூலம் ஒப்புதல் பெற்று நேரடியாகவும் அளிக்கலாம். ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.

கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, முன்வைப்புத் தொகையை ஆன்லைன் மூலமாகச் செலுத்தும் வசதி இந்தத் தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேரடியாகவும் அவா்கள் டெபாசிட் தொகையை அளிக்கலாம்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு வைப்புத் தொகை ரூ.5 ஆயிரமாகும், பொதுப் பிரிவினருக்கு ரூ.10 ஆயிரம்.

வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 2 பேர் மட்டும் உடன் செல்லலாம்.

வேட்புமனு தாக்கலுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் ஐந்தில் இருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டா் சுற்றளவிற்குள் வாகனத்தில் வரக்கூடாது.

வேட்புமனு தாக்கலின்போது ஒரே நேரத்தில் வேட்பாளா்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக வெவ்வேறு நேரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவாா். காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு முடியும்.

விடுமுறை நாள்கள்:

சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படாது.

ஊா்வலங்கள் நடத்தினாலும், மாநில அரசின் கரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊா்வலம் செல்ல முடியாது. இந்த நெறிமுறைகளை மீறினால் அதில் தேர்தல் ஆணையம் தலையிடாது.

ஆனால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் மூலம் தண்டனை விதிக்கப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படவில்லை.

50 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோயுள்ளவா்கள் என முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்றவா்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரத் துறை ஏற்பாடுகளைச் செய்யும்.

இந்த முன்னுரிமையைப் பயன்படுத்தி பலா் தடுப்பூசி போட்டுள்ளனா்.

தேர்தல் பணியாளா்களுக்கு கரோனா சோதனையும் கட்டாயமாக்கப்படவில்லை என்றாா் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

கரோனா கால அம்சங்கள்…

1. வேட்புமனுக்களை இணையம் வழியாக தட்டச்சு செய்து நேரில் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2. வைப்புத் தொகையை ரொக்கமாக செலுத்துவதுடன், இணைய வழி பணப் பரிவா்த்தனையும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக போட்டியிட மனு செய்வோா் உடன் இரண்டு பேரை மட்டுமே அழைத்து வர வேண்டும். கரோனாவுக்கு முன்பாக 5 பேர் வரை அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

3. சமூக இடைவெளியுடன், முகக் கவசமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

4. கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க தோதல் நடத்தும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே