மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முக தேர்வு பட்டியல் ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முக தேர்வு பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2018 ம் ஆண்டு  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் வெளியிட்டது.

இத்தேர்வுக்கு 2 ஆயிரத்து 176 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 785 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

மீதமுள்ளவர்களுக்கு அதே ஆண்டு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.  விதிகளின்படி, ஒரு பதவிக்கு இரு விண்ணப்பதாரர்கள் என்ற அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும்.

ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்களை அழைக்காமல், 33 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதை எதிர்த்து விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களைப் போல, நேர்முகத்தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை எனச் சுட்டிக் காட்டினார்.

இதையடுத்து புதிய விதிகளை வகுப்பதாகவும், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடத்தப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஏற்கனவே 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே