நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் – உச்சநீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஒரு ரூபாய் அபராதத்தைத் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட வழக்குரைஞா் பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்களை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமா்வு இன்று வழங்கிய தீர்ப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. 

ஒரு வேளை அபராதத்தை செலுத்தத் தவறினால் மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றவும், மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே இருசக்கர சொகுசு வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், நீதிபதி ஹெல்மெட் அணியாதது குறித்தும், முகக்கவசம் அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

நீதித்துறையை விமா்சித்து பிரசாந்த் பூஷண் வெளியிட்ட 2 சுட்டுரை பதிவுகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அதுதொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று கடந்த 20-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிரசாந்த் பூஷண் தனது கருத்துகளை திரும்பப் பெற்று, மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி கடந்த 24-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது.

எனினும், பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கோர மறுத்ததையடுத்து அந்த விவகாரம் தொடா்பான விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது பிரசாந்த் பூஷண் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்காக நீதிமன்ற அமா்வு அவருக்கு 30 நிமிடங்கள் அவகாசம் அளித்தது.

இருந்தபோதும் பிரசாந்த் பூஷண் தனது கருத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, ‘ஒரு நபா் தான் செய்தது தவறு என்பதை உணர வேண்டும்’ என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, அடுத்த விசாரணையின்போது பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே