கனடா தலைநகரில் இனவெறிக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார்.
அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியில் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் காவலர் ஒருவரால் கழுத்தால் மிதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பூதாகரமாக வெடித்தது.
வெள்ளை மாளிகையையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் கண்ணீர்ப் புகை குண்டு வீசி அமெரிக்க காவலர்கள் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பல பகுதிகள் மிகவும் தீவிரமாக இன்று வரை போராட்டங்கள் நடைபெற்றவண்ணம் உள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டுவருகிறது.
இதனை அடுத்து, இங்கிலாந்து, கனடா ஆகிய பகுதிகளிலும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துவருகிறது.
இந்தநிலையில், கனடா தலைநகர் ஓட்டாவாவில் நடைபெற்ற இனவெறிக்கு எதிரான பேரணியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீரென பங்கேற்றார்.
இது போராட்டக்காரகளை மிகவும் ஆச்சரியமடையச்செய்தது.
பேரணியில் பங்கேற்றது மட்டுமல்லாமல், கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டிற்கு மரியாதை செலுத்தும் வகையில் சுமார் 9 நிமிடங்கள் முழங்காலிட்டு மவுன அஞ்சலி செலுத்தினார்.
கனடாவின் டொரண்டோ நகரிலும் இதுபோன்ற பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பொதுமக்கள் யாரும் ஒன்றுகூடவேண்டாம் என கனடா சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்திருந்த நிலையில், கனட பிரதமரே போராட்டத்தில் பங்கேற்றது போராட்டக்காரர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.