காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

ராகுல் காந்திக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 51-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 19) காலை, ராகுல் காந்தியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், தனது சமூக வலைதளப் பக்கங்களிலும், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டார்.

அப்பதிவில், “எனது ஆருயிர் இளவல் ராகுல் காந்திக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, எல்லா வகையிலும் சமத்துவமான இந்தியாவை நிறுவுவதற்காக அவர் ஆற்றிவரும் தன்னலங்கருதா, ஓய்வில்லாப் பணியைப் பாராட்டும் அனைவரோடும் இணைகிறேன். காங்கிரஸ் கட்சியின் அடிப்படைப் பண்புகளின் மேல் அவருக்குள்ள ஈடுபாடு மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக அமையத்தக்கதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே