சிஏஏ போராட்டம் தொடர்பான வழக்கு.. உத்தரவு நிறுத்தி வைப்பு..!

சிஏஏ போராட்டம் தொடர்பான வழக்கில் நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திருப்பூரை மனதில் கொண்டே பிறப்பிக்கப்பட்டது என விளக்கமளித்துள்ள உயர்நீதிமன்றம், அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

திருப்பூரில் சிஏஏ சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை தடுக்கக்கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, அனுமதியில்லாமல் திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், அமைதியான முறையில் போராடிவரும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதை திரும்ப பெற வேண்டுமென வைகை, மோகன், என்.ஜி.ஆர்.பிரசாத், முபீன், ராஜா முகமது உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.

உயர்நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை வைத்து, மதுரையில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை மிரட்டும் வகையில் காவல்துறையினர் செயல்படுகின்றனர் என்றும், நோட்டீஸ் அளித்துள்ளனர் என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

அப்போது நீதிபதிகள் நேற்று தாங்கள் பிறப்பித்த உத்தரவு, திருப்பூர் சம்பந்தப்பட்டதுதான் என்றும், தமிழகம் முழுவதுக்கும் பொருந்தும் வகையில் உத்தரவு வெளியிடவில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், திருப்பூர் போராட்டம் தொடர்பான வழக்கில் நேற்று பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக கூறி, வழக்கை 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றையதினம் அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைக்கலாம் என்றும் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே