பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகள் மீது மோதிய கல்லூரி பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து பள்ளத்தில் தள்ளிவிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சித்தவல்லி கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் பள்ளிக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரே கல்லூரியை சேர்ந்த இரண்டு பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
அதில் ஒரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது வேகமாக மோதியது. மேலும், அங்கு அரசு பேருந்துக்காக நின்று இருந்த பள்ளி மாணவிகள் மீதும் அந்த பேருந்து மோதியது.
இதில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம் அடைந்தனர். இதையடுத்து, மாணவிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய கல்லூரி பேருந்துகளை தாக்கி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டனர்.
மேலும், மற்றோரு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தாவல் அறிந்து வந்த போலீசார், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.