நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாகவே இந்திய பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 6.5 சதவீதம் வரை உயரும் எனவும்  ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதுகுறித்து டெல்லியில் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் விளக்கினார்.

அதன் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக ஆக இருக்கும் எனவும், 2020-21 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6லிருந்து 6.5 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

2025ம் ஆண்டிற்குள் 4 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கவும், 2030ம் ஆண்டிற்குள் 8 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நடப்பு நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 3.7 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாக அதிகரிக்கும் எனவும், நடப்பு நிதியாண்டில் மொத்த விற்பனை பணவீக்கம் 4.7 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அன்னிய செலாவணி கையிருப்பு 461.2 பில்லியன் டாலர் உள்ளதாக குறிப்பிட்ட அவர், நாட்டின் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி 13.4 சதவீதமாக உயர்ந்து உள்ளதாகவும், தொழில்துறை வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், உலக வங்கி அறிக்கையின்படி, புதிய நிறுவனங்கள் தொடங்குவதில் இந்தியாவுக்கு மூன்றாமிடம் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன், சர்வதேச பொருளாதார மந்த நிலை, இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலித்ததாக குறிப்பிட்டார்.

அமெரிக்கா-சீனா வர்த்தகப்போர், அமெரிக்கா-ஈரான் போர் பதற்றத்தால் சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், முதலீடு, நுகர்வு, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எளிதில் தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் 142வது இடத்தில் இருந்து 63 ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதேபோல் மனிதவள மேம்பாடு குறியீட்டில் இந்தியா 129 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில், இரண்டு திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

அதில் திருக்குறளின் 76வது அதிகாரத்தில் உள்ள பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று என்ற குறளும், செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதிற் கூரிய தில் ஆகிய குறளும் இடம்பெற்றுள்ளன. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே