எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி..!!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33-வது நினைவு தினத்தையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்பட அதிமுகவினர் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 33-வது நினைவுதினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர், எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுகவினர் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் எம்ஜிஆர் நினைவுநாள் உறுதிமொழி ஏற்றனர். 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க, அதிமுக-வினர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

எம்ஜிஆர் புகழை யாரும் தட்டிப்பறிக்க விடமாட்டோம், எதிரிகளின் பொய்முகத்தை மக்களுக்கு காட்டுவோம், மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்போம் என அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதேபோன்று, முதல்வர் மற்றும் துணை முதல்வர் இல்லங்களில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே