2020-ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரை!

குடியுரிமை திருத்தச் சட்டம் மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.

அப்போது, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதை இந்தியா கண்டிப்பதாகக் குறிப்பிட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி இருப்பதன் மூலம், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் கனவு நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும்; இது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ராம்நாத் கோவிந்த கூறினார்.

போராட்டங்களின்போது வன்முறை நிகழ்த்தப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்த குடியரசுத் தலைவர், இத்தகைய வன்முறை ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடும் என எச்சரித்தார். 

சட்ட வழிகளின்படி குடியுரிமை கோருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹஜ் பயணத்திற்கான அனைத்து நடைமுறைகளையும் டிஜிட்டல் மயமாக்கிய முதல் நாடு இந்தியா என பெருமிதம் தெரிவித்த ராம்நாத் கோவிந்த், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் அரசு உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்த 10 ஆண்டுகளை இந்தியாவின் ஆண்டுகளாக மாற்றுவதற்கான தீவிர முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே