தமிழகத்தில் வரும் 7-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அன்று கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு, மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நிபந்தனைகளுடன் வரும் 7-ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் அங்கு செல்வதாக தமிழக அரசு தெரிவித்தது.

இதனால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மதுபானக் கடைகளை வரும் 7-ம் தேதி முதல் திறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், ஒவ்வொரு நபருக்கும் இடையேயான இடைவெளி 6 அடி தூரமாக இருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும், மதுபானக் கடைகளை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், மதுபானக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

அரசின் இந்த அறிவிப்புக்கு ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன், டிடிவி தினகரன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, வேல்முருகன் என்று பல்வேறு கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஏழாம் தேதி, டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,724 ஆக உள்ளது.

திருவிக நகர், ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதிகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

தமிழகத்தின் கரோனா அபாயப் பகுதியாக சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மாறியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையே மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு இன்று புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இங்கு கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே