#BREAKING : முதல்வர் வேட்பாளர் யார்? … அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை!!

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் சி.வி. சண்முகம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார் என்ற சர்ச்சை அதிமுக அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து அதிமுக அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, அமைச்சர் செல்லூர் ராஜு, ” அதிமுக எப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் நடைபெறும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், “முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதேபோல அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் “முதலமைச்சர் பழனிசாமியின் தலைமையையே மக்கள் விரும்புகிறார்கள். இதுகுறித்து பொதுவெளியில் பேசி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே