அனைத்துத் திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ள திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:

”கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 4.1.2021 அன்று, தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினர், கரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், ரயில், பஸ் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், திரைப்படப் படப்பிடிப்பு ஆகியவற்றுக்குப் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில், திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100 சதவீத இருக்கை பயன்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதியும், மத்திய அரசு 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதித்திருந்த போதிலும், சங்கத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்து, 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மத்திய அரசின் அறிவுரையைக் கருத்தில் கொண்டும், இது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்துத் திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ள திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வுத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது.

கரோனா நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே