பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்திலிருந்து கோழிகளை கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரள மாநிலத்தில் உறுதிசெய்யப்பட்ட பறவைக் காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிக்கையில், கேரள மாநிலத்தின், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வாத்துகளில் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய அரசு 04.01.2021 அன்று அறிவிப்பு வெளியிட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அண்டைய மாநிலங்களான கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் நோய்க்கிளர்ச்சி ஏற்பட்ட போதெல்லாம் தமிழக அரசின் துரித நடவடிக்கை மற்றும் ஏற்கனவே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் தீவிர நோய்கண்காணிப்பு நடவடிக்கைகளால் இதுவரை தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் நோய்க்கிளர்ச்சி ஏற்படவில்லை. 

தற்போது கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நோய்க்கிளர்ச்சியினை தொடர்ந்து, தமிழ்நாட்டில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் வழிகாட்டுதலுக்கிணங்க, கால்நடை பராமரிப்புத்துறை அரசு முதன்மைச் செயலர் அறிவுரையின்படி, பறவைக்காய்ச்சல் நோய் தொற்று பரவாமல் தடுப்பது தொடர்பாக, கீழ்க்கண்டவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள 26 தற்காலிக சோதனைச் சாவடிகள் அனைத்திலும் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு குழுக்கள் மூலம் கேரளத்திலிருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள் மற்றும் அதன் முட்டைகள் மற்றும் கோழியினம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் தமிழக எல்லைக்குள் நுழையா வண்ணம் தடை செய்து திருப்பி அனுப்பப்படுகிறது.

தமிழகத்தில் நுழையும் மற்ற அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கு நோய் வராத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோழிப் பண்ணைகளை தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் கேரளாவிலிருந்து கோழிகள்/ குஞ்சுகள் விற்பனைக்கு வராமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்த சூழ்நிலையினையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் கொண்ட மொத்தம் 1061 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுக்களுக்குத் தேவையான சுயபாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவில் இருப்பு உள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை கோயம்புத்தூர், கால்நடை பன்முக மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்புகொள்ள கீழ்க்கண்ட தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது.

தொலைபேசி எண் :- 0422-2397614 / 9445032504

தேசிய முட்டை உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு, நாமக்கல், தலைவர், கோழிப் பண்ணையாளர்கள் சங்கம், நாமக்கல் மற்றும் செயலர், பல்லடம், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் கேரள மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து கோழிக்குஞ்சுகள், முட்டைகள் மற்றும் தீவனம் போன்ற பொருட்களை பெறுவதாக இருந்தால் உரிய அரசு அலுவலர்களிடமிருந்து முறையாக சான்றிதழ் பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்திலுள்ள அனைத்து கோழிப் பண்ணைகளிலும் தீவிர உயிரி பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றிட கோழிப்பண்ணையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கோழிகளில் பெரிய அளவில் சந்தேகத்திற்குரிய திடீர் இறப்புகள் ஏதேனும் ஏற்படின் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் விவரம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். நன்கு சமைத்த கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பதால் பறவைக்காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு பரவாது. மேலும், இப்பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, இந்நோய் குறித்து பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

கேரள மாநிலித்திலிருந்து தமிழக மாநிலத்திற்குள் பறவைக்காய்ச்சல் பரவாத வண்ணம் அரசால் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே