Breaking News : புதுச்சேரியில் ஹிஜாப் அணிந்ததால் வெளியேற்றப்பட்ட மாணவி

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற விழாவில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவியை வெளியேற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி விமானநிலையம் வந்தடைந்தார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

அவருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பல்கலைகழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சில மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

மொத்தமாக தற்போது 322 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

மொத்தம் 19,289 மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பட்டங்கள் வழங்கப்பட்டது.

அதில் 15,020 முழுநேர கல்வி மாணவர்கள் மற்றும் 4,269 தொலைதூர கல்வி மாணவர்கள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர்.

பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதற்கு முன்னதாக விழாவிற்கு வந்த சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே அழைத்து விசாரித்து மாணவரை உள்ளே அனுப்பினார்கள்.

விழாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கேரள மாணவி ரபிஹாவை அவரது தலையில் அணிந்து வந்த ஹீஜாப்பை பாதுகாப்பு அதிகாரிகள் அகற்ற கூறியுள்ளனர். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவர் வெளியேற்றப்பட்டார்.

இவர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர். குடியரசு தலைவர் புறப்பட்டு சென்ற பின்னரே அந்த மாணவி உள்ளே அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து மாணவி ரபிஹாவிற்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த மாணவி பேசுகையில் என்னுடைய போராட்டத்தை வெளிபடுத்தும் விதமாக தங்க பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே