லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் உரை!

லடாக்கில் இன்று ராணுவ வீரர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறளை உதாரணம் காட்டி பேசியது கவனிக்கத் தக்கதாக அமைந்தது.

லடாக்கின் நிம்மு பகுதியில், ராணுவ வீரர்கள் மத்தியில் இன்று பிற்பகல் 2 மணியளவில், மோடி உரையாற்றினார்.

அவர் உரையில், நமது வீரர்களின் தியாகம் இந்தியாவின் பலத்தை உலகறிய செய்துள்ளது. மலை சிகரங்களை விட இந்திய வீரர்களின் துணிச்சல் உயரமானது.

வீரர்களின் தியாகத்தை நாடு ஒரு போதும் மறக்காது. கடினமான பாறைகளை விட நமது தீர்மானம் உறுதி கொண்டதாக இருக்க வேண்டும்.

நமது நாட்டை பாதுகாக்க எந்த தியாகத்திற்கும் தயாராக உள்ளோம்.

நமது ராணுவ வீரர்கள் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் பெருமையடைய செய்துள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கு நமக்கு சொந்தமானது என்பதை உறுதியுடன் கூறுகிறேன்.

லடாக் முதல் கார்கில் வரை உங்களின் வீரத்தை அறிய செய்துள்ளீர்கள். நமது எதிரிகளின் சதி திட்டம் ஒரு போதும் வெற்றி பெறாது.

எதிரிகளுக்கு ராணுவ வீரர்கள் தக்க பாடம் நடத்தியுள்ளனர். பலவீனமானவர்கள் ஒரு போதும் அமைதிக்கான முயற்சியை எடுக்க மாட்டார்கள்.

தனது உரையின் இறுதி பகுதியில், அவர் கிருஷ்ண பரமாத்மாவிடம் உள்ள சுதர்சன சக்கரத்தை குறிப்பிட்டார்.

புல்லாங்குழல் வாசித்த கிருஷ்ணர்தான், சுதர்சன சக்கரம் வைத்திருந்தார்.

எனவே அமைதியையும், ஆக்ரோஷத்தையும் இந்தியா எப்போதுமே இரு கண்களாக பாவிக்க கூடியது என்றார் மோடி.

இதையடுத்து, படைமாட்சி அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள, திருக்குறள் ஒன்றை அவர் குறிப்பிட்டார். “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு” என்ற திருக்குறளை அவர் உச்சரித்தார்.

பிறகு இதற்கு ஹிந்தியில் விளக்கமும் கொடுத்தார்.

தமிழ் உரையாசிரியர்கள் உரைப்படி, இந்த குறளுக்கான விளக்கம் இதுதான்.

ஒரு படைக்கும் வீரம் மிக அவசியமான ஒன்று. போர் குணம் மிக அவசியம். படை வீரர்கள் செய்வது நாட்டின் பாதுக்காப்பிற்கு என்ற பெருமை மற்றும் மான உணர்வு அவர்களுக்கு உள்ளுர வேண்டும்.

போர் புரிய செல்லும் பொழுது வழி நெடுவிலும் போரிலும் நேரக்கூடிய செலவுகளுக்கு தேவையான நிதி வேண்டும். போருக்கு தேவையான பொருள்களை வாங்கும் அளவு நிதி வேண்டும்.

எத்தகைய நிலையிலும் தளராத மன விலிமையும் தெளிவும் கொண்ட அரசன் ஆகிய நான்கும் படைக்கு வலிமை சேர்க்கும் என்பது பொருளாகும்.

கிருஷ்ணர் மற்றும் திருக்குறள் ஆகிய இரு உதாரணங்களை தனது பேச்சின்போது அவர் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே