தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை விலக்கிக் கொள்ளப்பட்டது.
தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை நிரப்புதல், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசு பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிடக் கலந்தாய்வு நடத்துதல் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்புவதறகு இன்று காலை வரை அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போராட்டத்தை கைவிட வேண்டும என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது