#BREAKING : ஜூன் 15ம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது..! – உயர்நீதிமன்றம்

பொது முடக்கக் காலத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 15-ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்று கருத்துக் கூறியுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைப்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 2வது வாரத்தில் பொதுத் தேர்வை நடத்துவது குறித்து முடிவெடுத்து பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 15-ம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என்றும், இன்றைய விசாரணைக்கு அரசு தலைமை வழக்குரைஞர் 2.30 மணிக்கு ஆஜராகவில்லை என்றால், 10ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, மாணவர்கள், ஆசிரியர்கள் நலனில் தமிழக அரசு எவ்வாறு ரிஸ்க் எடுக்கிறது. 9 லட்சம் மாணவர்கள் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது.

பொது முடக்கக் காலத்திலேயே பொதுத் தேர்வை நடத்த வேண்டியதற்கு அவசியம் உள்ளது என நினைக்கிறீர்களா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பியிருந்தது.

ஜூன் 15-ம் தேதி 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளிகள் திறப்பதை ஜூலையில் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசின் தெரிவித்திருக்கும் நிலையில், அதனை மீறி, ஜூன் மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்படுவது ஏன்? கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கக் காலத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை தமிழக அரசே மீறலாமா?

லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் எப்படி ரிஸ்க் எடுப்பீர்கள்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், தமிழக முதல்வர் பழனிசாமியுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே