#BREAKING : காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக்க சட்ட முன்வடிவு தாக்கல்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதற்கு இடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். 

மேலும் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கான சட்டமசோதா இன்று நடக்கும் தமிழக சட்டபேரவையில் தாக்கலாகிறது என தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.

இதில் எடப்பாடி தலைமையிலான ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர் பங்கேற்றனர்.

அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தாக்கல் செய்தார். 

காவிரி டெல்டா மண்டலத்தில் உள்ள பகுதிகள் : தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்கள் முழுவதும் காவிரி டெல்டா மண்டல பகுதிகள் எனவும், 

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி ஆகிய தொகுதிகளும், 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மனமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பகுடி ஆகிய தொகுதிகள் காவிரி டெல்டா மாண்டமாலாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வோளாண் மண்டல மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து பேசினார்.

ஒரு விவசாயியாக இதனை தாக்கல் செய்வதில் பெருமை கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்ட முன்வடிவு மூலமாக, ஹைட்ரோகார்பன், மீத்தேன், மென்களிக்கல் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. 

துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது

ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும், விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, இதற்காக தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் எனவும் இந்த அதிகார அமைப்பு முதலமைச்சர் தலைமையில் செயல்படும் என்றும் கூறினார்.

மீறி அந்த தொழில்களை நடத்தினால் 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பிற்கு ஒட்டுமொத்த மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே