8.2 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் வந்து சேரும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக நகரங்களில் விபத்து நடந்த 8 புள்ளி 2 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ்கள் சென்றடைவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ, சண்முகையா, 108 ஆம்புலன்ஸ்கள்  விபத்து நடந்த இடத்திற்கு வருவதற்கு ஒரு மணி நேரம் வரை ஆவதாக குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சர்வதேச அளவில் ஜப்பானில் விபத்து நடந்தால் 13 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் வருவதாகவும்; ஆனால் அதைவிட வேகமாக தமிழ்நாட்டு நகரங்களில் ஆம்புலன்சுகள் சென்றடைவதாகவும் குறிப்பிட்டார்.

சராசரியாக  8 புள்ளி 2 நிமிடத்திலேயே  108 ஆம்புலன்ஸ்கள் தமிழகத்தில் சென்றடைவதாகவும் தெரிவித்தார்.

தமிழக  கிராமப்புற பகுதிகளில் விபத்து நடந்த 13.5 நிமிடங்களிலும், மலைப்பகுதிகளில் 16.5 நிமிடங்களிலும் 108 ஆம்புலன்ஸ்கள் சென்றடைவதாக அவர் கூறினார்.

நாளொன்றுக்கு 15000 அழைப்புகளை 108 ஆம்புலன்ஸ் கையாள்வதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைப்பவர்கள், அது எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள பிரத்யேக டிராக் செயலி இரண்டு மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

200 புதிய ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த சேவை 108-ல் இல்லாமல் வேறொரு தொடர்பு எண்ணுடன் செயல்படும் என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே