BREAKING : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 2007 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற முறைகேடாக அனுமதி அளித்தது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை கடந்த மாதம் 21 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீட்டித்து கடந்த 19ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

25 நாட்களாக சிறையில் இருக்கும் சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்தால், வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வாய்ப்பு இருப்பதாக வாதிட்டார். ஆதாரங்களை கலைக்கக்கூடும் என்பதால் சிதம்பரத்திற்கு ஜாமீன் அளிக்க கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா இணை நிறுவனர்களான இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜி, 2007 – 2008 ஆம் ஆண்டு சிதம்பரத்தை சந்தித்து இருப்பதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக தெரிவித்தார். அப்போது தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தின் நலனை கவனத்தில் கொள்ளுமாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார் என்றும் துஷார் மேத்தா வாதிட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா குழும பிரதிநிதிகளுக்கும், கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையே அதிக அளவிலான மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நடந்திருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். ஜாமின் வழங்கினால் சிதம்பரம் வெளிநாடு தப்பி சென்று விட மாட்டார் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களுக்குப் பின் தீர்ப்பளித்த நீதிபதி சுரேஷ்குமார் கைட், சிதம்பரம் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விடுவார் என்ற சிபிஐ தரப்பு வாதத்தை ஏற்க மறுத்தார்.

எனினும் வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்டுத்தி சாட்சிகளை கலைக்க கூடும் என்று தெரிவித்தார்.

எனவே சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே