இந்தியாவின் இளைய தலைமுறை மீது உலகமே எதிர்பார்ப்பு வைத்துள்ளது – பிரதமர் மோடி

சென்னை ஐஐடி 56ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர், மாணவர்களின் வெற்றியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த பங்கு உள்ளது என்றார்.

பெற்றோரின் தியாகத்தால் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைகின்றனர் என்றும், ஆசிரியர்களின் ஓய்வில்லா உழைப்பு மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்குகிறது என்றும் அவர் கூறினார்.

பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்களுக்கு எழுந்து நின்று கைதட்டுங்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.

உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழின் தாயகமாக விளங்கும் தமிழகம் தனிச்சிறப்பு பெற்ற மாநிலம் என்றும் மோடி தெரிவித்தார்.

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபோது அரசு தலைவர்கள், தொழில்துறையினர், முதலீட்டாளர்கள் என பல தரப்பினரை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார்.

தாம் சந்தித்த அனைவருமே இந்தியா குறித்தும், நாட்டின் இளைய தலைமுறை குறித்தும் நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பில் உள்ளதாக பிரதமர் கூறினார்.

புதிய இந்தியா பற்றிய நமது தொலைநோக்குப் பார்வை மற்றும் இந்தியாவில் உள்ள இளைய தலைமுறையினர் மீதான நம்பிக்கை, எல்லா விவாதங்களிலும் பொதுவான அம்சமாக இடம்பெற்றதாக மோடி கூறினார்.

உலகம் முழுவதும் இந்தியர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர் என்றும், அறிவியல், தொழில்நுட்ப துறைகளில் உலக அரங்கில் இந்தியர்கள் தான் முன்னிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக அளவில் முன்னிலையில் இருக்கும் இந்தியர்கள், இந்தியாவில் ஐஐடியில் படித்தவர்கள் என்றும் மோடி சுட்டிக்காட்டினார்.

ஒட்டு மொத்த உலகமே இந்தியாவை ஒரு புதிய வாய்ப்பாக கருதிக் கொண்டிருக்கிறது என்றும், சர்வதேச அளவில் இந்தியாவிற்கு ஒரு பிராண்டை உருவாக்குவதில் ஐஐடி சென்னைக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், மாணவ, மாணவிகள் தங்கள் பங்களிப்பை இதற்காக வழங்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

இந்தியாவின் தனித்துவமான கண்டுபிடிப்புகள் சர்வதேச சந்தையில் எதிர்காலத்தில் உரிய இடத்தை பெற வேண்டும் என்றார்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க கல்வி நிறுவனங்களில் அடல் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களின் கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்த மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும், கடுமையான முயற்சியும் உழைப்பும் எதையும் சாத்தியமாக்கும் என்றும் மோடி அறிவுறுத்தினார்.

எப்போதுமே சவாலான விஷயங்களில் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

எங்கு பணியாற்றினாலும், எங்கு வசித்தாலும் தாய்நாட்டை மறந்துவிடக் கூடாது என்றும், உங்களது ஆய்வுகளும், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் தாய்நாட்டிற்கு, இந்திய சகோதரர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள் எனவும் மோடி கேட்டுக் கொண்டார்.

வாழ்க்கை முறையால் ஏற்படும் நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்களுக்கு தீர்வு காண மாணவர்கள் முன்வர வேண்டும் என்றும், இளைய தலைமுறையினர் தங்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விவேகானந்தர் கூறியபடி மாணவர்கள் தங்களுக்காகவும் பிறருக்காகவும் வாழ வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே