செய்தியாளர் வாயை குத்த விரும்புவதாக மிரட்டல் விடுத்த பிரேசில் அதிபர் போல்சனாரோ

ஊழல் குற்றச்சாட்டில் உங்கள் மனைவிக்கு தொடர்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய நிருபருக்கு, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடந்த நிருபர்கள் சந்திப்பின் போது, குரூசோ இதழில் வெளியாகியிருந்த செய்தியை குறிப்பிட்டு, ஓ குளோபோ பத்திரிகை நிருபர், பிரேசில் முதல் பெண்மணியான மைக்கேல் போல்சனாரோவுக்கும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியும், தற்போது செனட்டராக இருக்கும் அவரது மகன் பிளாவியோ போல்சனாரோவின் முன்னாள் ஆலோசகருமான குயிரோஸ்க்கும் உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது ஆத்திரமடைந்த ஜெய்ர் போல்சனரோ நிருபரை நோக்கி. ‘நான் உங்கள் வாயை குத்துக்களால் உடைக்க விரும்புகிறேன்’ எனக் கூறினார்.

இதற்கு சக நிருபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாத அவர், சந்திப்பை பாதியிலேயே முடித்து கொண்டு புறப்பட்டார்.

குரூசோ இதழில், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் ஜெய்ர் போல்சனாரோ அதிபராக பதவியேற்கும் முன்னர், ரியோ டி ஜெனிரோவில் பிராந்திய சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, குயிரோஸ் மற்றும் பிளேவியோ போல்சனாரோ ஆகியோர் அரசு ஊழியர்களிடமிருந்து ஊதியத்தை மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில் விசாரணையில் உள்ளனர்.

இந்நிலையில், 2011 மற்றும் 2016ம் ஆண்டுக்கு இடையில், மைக்கேல் போல்சனாரோவின் வங்கிக் கணக்கில் குயிரோஸ் பணத்தை டெபாசிட் செய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இது குறித்து போல்சனாரோவின் மனைவி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

பிரேசில் அதிபரின் பகிரங்க மிரட்டல் குறித்து ஓ குளோபோ, ‘தனது நிருபர் வேலையை ஒரு தொழில் முறையில் மேற்கொண்டதாகவும், இது ஜெய்ர் போல்சனாரோ ஒரு பொது ஊழியரின் கடமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.

இதற்கு அவர், பொதுமக்களுக்கு பதில் கூற வேண்டும்’ என, அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே