விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும் – எல்.முருகன், தமிழக பாஜக தலைவர்

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விநாயகர் சிலைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைவர் எல்.முருகன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு தெருக்களில் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் முதல்வரை நேரடியாக சந்தித்து சிலைகள் வைத்து வழிபடுவது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பாஜக தலைவர் எல்.முருகன் விநாயகர் சிலை நிறுவுவதை பொறுத்த வரையில் இந்து முன்னணி நிலைபாடே பாஜகவின் நிலைபாடு என்றார்.

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவே அனுமதி கோருகிறோம்; ஊர்வலத்திற்கு அல்ல என்று கூறிய அவர், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு அனுமதி தராதது புரியாத புதிராக உள்ளது என்றார்.

மேலும் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி தந்த தமிழக அரசு விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன் என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ‘ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்த விசயத்தில் திடமான முடிவை எடுத்திருக்கின்றன’ என்று கூறியுள்ளார்.

தடையை மீறி விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என இந்து முன்னணி ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே