மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான்.

தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன்.

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு.

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். ‘உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து, கர்ஜனையோடு “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே மரணத்தைத் தழுவியவர்.

திப்பு சுல்தானின் காலம்:

1750 – நவம்பர் 20 ஆம்தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் பிறந்தார்.

1776 – காதிகோட்டையை கைப்பற்றினார்.

1782 – டிசம்பர் 26 நாள் மைசூர் பேரரசராக அரியானை ஏறினார்.

1780-84 – பிரிட்டிஷாருடன் இரண்டாம் மைசூர் போர்.

1789-92 – பிரிட்டிஷாருடன் மூன்றாம் மைசூர் போர்.

1799 – பிரிட்டிஷாருடன் நான்காம் மைசூர் போர்.

1799 – மே 4 ஆம் தேதி வீர மரணம் அடைந்தார்.

பிறப்பு

‘மைசூரின் புலி’ என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை சாதாரண குதிரைவீரனாக இருந்து, பிறகு ஒரு அரசை ஆளும் மன்னனாக உயர்ந்து, இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றிக்கண்டவர்.

ஆரம்ப வாழ்க்கை

கல்வியில் சிறந்து விளங்கிய திப்பு சுல்தான், இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் பல போர்க்களம் கண்டார், இதனால் தன்னுடைய பதினாறு வயதிலேயே யுத்தத்தந்திரங்கள், ராஜதந்திரங்கள் என அனைத்திலும் தேர்ச்சிப்பெற்று, சிறந்த படைத்தளபதியாக வளர்ந்தார். 1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு சொந்தமான காதிகோட்டையை கைப்பற்றிய திப்புசுல்தான், பிறகு 1780ல் நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலப்படைகளுக்கு எதிராக தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார்.

பின்னர், 1782ல் தன்னுடைய தந்தை ஹைதரலியின் மரணத்திற்குப் பிறகு, 1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26 நாள் தன்னுடைய 32 வது வயதில் ‘சுல்தானாக’ அரியானை ஏறினார். மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு சுல்தான் அவர்கள், ‘புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை’ தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார். சுமார் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போர் 1784 ஆம் ஆண்டு மங்களூர் உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது.

மூன்றாம் மைசூர் போர்

1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் மராட்டிய பேரரசும், ஐதராபாத் நிஜாமும் பிரிட்டிஷ் படைத்தளபதி கார்ன் வாலிசுடன் இணைந்து திப்பு சுல்தானுக்கு எதிராகப் போர்தொடுத்தனர். ஆனால், சற்றும் கலங்காத திப்புசுல்தான் எதிரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டார். 1792 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தப் போரில் திப்பு சுல்தான் தோல்வியடைந்தார். இறுதியில் சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின்படி பல பகுதிகள் பிரிட்டிஷ், ஐதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

சூழ்ச்சியால் நிகழ்ந்த திப்புவின் மரணம்:

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

இந்த சூழ்ச்சிக்கு 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், திப்பு சுல்தான் தீரமுடனும், துணிச்சலுடனும் போர்புரிந்தாலும், எதிரிகளின் நயவஞ்சக செயலினால் பிரிட்டிஷ் படைத் தொடர்ந்து முன்னேறித் தாக்கியது. இந்தத் தாக்குதலில் குண்டடிப்பட்டு கிடந்த திப்புசுல்தானிடம், ‘தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து கூறிய அவர், “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே 1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி வீரமரணம் அடைந்தார்.

“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”

– இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

ஆட்சிமுறையும், சீர்திருத்தங்களும்:

திப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளை பயன்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

திப்புசுல்தான் ஆட்சியில், பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர்.

மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டபடியான விசாரணையும், தண்டனையும் அமையவேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

1782 முதல் 1799 வரை மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்புசுல்தான் அவர்கள், சிறந்த படைவீரராகவும், ஆட்சியாளராகவும் வாழ்ந்தவர். தன்னுடைய கொள்கை அறிவிப்பால் மட்டுமல்லாமல், நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் மக்கள் சார்ந்த கொள்கைகளை இறுதிவரை பின்பற்றியவர். போர் வ்யூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும், இராணுவ தொழில்நுட்பத்திலும் ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மாவீரன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வீர வரலாறு படைத்தவர் திப்புசுல்தான் என்றால் அது மிகையாகது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே