முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேச அணி..!!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி, முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக சாத்மன் இஸ்லாமும், இம்ருள் கயசும் களமிறங்கினர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அவர்கள் இருவரும் தலா 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அந்த அணியின் கேப்டன் மொனுமில் ஹக்யூ, பொறுப்பை உணர்ந்து நிதானமாக ஆடினார்.

மறுமுனையில் ஆடிக் கொண்டிருந்த முகமது மிதுனை, முகமது சமி அவுட்டாக்கினார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய முஸ்பிகுர் ரகீம், கேப்டனுடன் சேர்ந்து பொறுமையாக ஆடினார்.

இந்த ஜோடி ஓரளவு ரன் சேர்த்த நிலையில், கேப்டன் மொனுமிலை அஸ்வின் வெளியேற்றினார்.

43 ரன்கள் எடுத்த போது ரகீமும் ஆட்டமிழக்கவே, பின் வரிசை வீரர்கள் வரிசையாக அவுட்டாகி நடையைக் கட்டினர்.

இறுதியில் வங்கதேச அணி 150 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் இந்திய அணி, வங்கதேச அணியை முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினாலும், பீல்டிங்கில் படுமோசமாகவே இருந்தது.

கிட்டத்தட்ட 5 கேட்ச்சுகளுக்கு மேல் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டனர். இதில் ஒரு சில கேட்சுகள் மட்டுமே கடினமான வாய்ப்புகள்; மற்ற கேட்ச்சுகள் மிகவும் எளிதாகவே இருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே