திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மருத்துவமனையில் இருளர் இன குழந்தைக்கு 108 ஆம்புலன்ஸ் தர மறுக்கப்பட்டதால், 3 மணி நேரத்துக்கும் மேலாக பெற்றோர் பரிதவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுக்குளம் இருளர் காலனியைச் சேர்ந்த காளியப்பன் – ரஞ்சிதா தம்பதியின் 2 வயது பெண் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கபட்டு, வலிப்பு ஏற்பட்டதால் செங்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பட்டார்.
அங்கு குழந்தையின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததால், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைத்தனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து சுமார் 3 மணி நேரமாகியும் வரவில்லை.
முன்னதாக, மருத்துவமனையில் இருந்து குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதால், குழந்தையையும், குளுக்கோஸ் பாட்டிலையும் கையில் ஏந்தியபடி பெற்றோர் பரிதவித்தனர்.
பலமுறை தொடர்பு கொண்டும் 108 ஆம்புலன்ஸ் வராததால், தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து குழந்தையை திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
இதனிடையே செங்கம் மருத்துவமனையில் இது குறித்து விசாரித்தபோது, சிபாரிசு இருப்பவர்களுக்கு மட்டுமே 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பப்படுவதாகவும், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படுவதில்லை என நோயாளிகள் குற்றஞ்சாட்டினர்.
எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.