ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வருக்கு கமல் ஹாசன் கேள்வி!

ஊரடங்கு உத்தரவு குறித்த மற்ற மாநிலங்கள் தன்னிச்சையாக முடிவுஎடுக்கும்போது தமிழக முதல்வர் எதற்காக காத்திருக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவுபெறுகிறது.

இருந்தும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துதான் வருகிறது.

அதனையடுத்து, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் கோரிக்கைகள் விடுத்துவருகின்றன.

இருப்பினும், மத்திய அரசு எந்த அறிவிப்பையும் இதுவரையில் வெளியிடவில்லை.

ஆனால், அதற்கு முன்னதாக ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்கள் வரை நீட்டித்துள்ளன.

மத்திய அரசின் முடிவை பின்பற்றுவோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மற்ற மாநில முதல்வர்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்துவரும் எங்களுடைய முதல்வர் எதற்காக காத்திருக்கிறார்? அவருடைய தலைவரின் குரலுக்காகவா? என்னுடைய குரல் மக்களுக்கானது? அவர்களிடமிருந்து வருவது. நீங்கள் இன்னமும் நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் எந்திரியுங்கள் சார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே