தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.

அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 3ம் தேதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் 22 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டசபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டசபைக் கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது விவாதம் தொடங்க உள்ளது.

இதில் சட்டசபை உறுப்பினர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

நாளையும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும். விவாதம் முடிந்ததும் அதற்கான பதிலுரை நிகழ்த்தப்படும். அன்றே சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இதைத்தொடர்ந்து இன்றைய சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ய உள்ளார்.

இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தாக்கல் செய்கிறார்.

தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் வரை நீட்டிக்க மசோதாவை தாக்கல் செய்கிறார்.

இதன் மூலம் தேர்தல் நடக்காத மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளில் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்படும்.

திமுக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சட்டசபைக் கூட்டத் தொடரை புறக்கணித்துள்ளதால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இந்த கூட்டத் தொடரில் உரையாற்ற உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே