கொரோனாவை தடுக்க ஆயூஷ், சித்த மருத்துவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

மத்திய அரசின் ஆயுஷ் துறை விஞ்ஞானிகள் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஆய்வு செய்ய முன்வர வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகள், ‘ஆயுஷ்’ என்ற ஒரு துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த துறையினருக்காக, ‘ஆயுஷ்’ என, பிரத்யேக அமைச்சகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆயுஷ் முறை மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் கலந்துரையாடினார். 

அப்போது அவர் பேசியதாவது :

கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. ஆயுஷ் துறையின் கீழ் செயல்படும் மருத்துவர்கள், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை தயாரித்து தர முன்வர வேண்டும்.

வீட்டிலேயே யோகா பயிற்சி செய்வதை, ஆயுஷ் துறையில் உள்ளவர்கள், மக்களிடம் பிரபலப் படுத்தி வருகின்றனர்; இது, மகிழ்ச்சி அளிக்கிறது.

கொரோனாவுக்கு ஆயுஷ் துறையில் மருந்து கண்டுபிடித்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், கொரோனாவை, ஆயுஷ் மருந்து கட்டுப்படுத்தும் என்பதை நிரூபிக்க வேண்டும்.

எனவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஆயுஷ் மருத்துவ நிபுணர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

அப்போது சித்தமருத்துவ கண்டுபிடிப்பான கபசுரக் குடிநீரை கொரோனா பாதித்தவர்களுக்கு தரலாம் என சில சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

வாத கப குடிநீரை அளிக்கலாம் என மற்றொரு தரப்பினர் பரிந்துரைத்த நிலையில், ஆதார பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே பரிசீலிக்க இயலும் என பிரதமர் மோடி தெரிவித்துவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே