அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இந்த ஆண்டில் நிறைவடையும்: முதல்வர் பழனிசாமி தகவல்

அத்திக்கடவு-அவிநாசி திட்ட பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:

ஈரோடு, கோவை மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் ரூ.1652 கோடி செலவில் தொடங்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 2021-ம் ஆண்டு இறுதிக்குள் இப்பணிகள் நிறைவடையும். இதன் மூலம் அந்த பகுதி பசுமையாக மாறும்.

ரூ.230 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நொய்யல் ஆறு சீரமைப்பு பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கீழ்பவானி பாசன நவீனப்படுத்தும் பணிக்காக ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாராபுரம் –அவிநாசிபாளையம் இடையே 4 வழிச் சாலை ரூ.824 கோடி செலவில் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.950 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ரூ.1125 கோடி செலவில் திருப்பூரில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.636 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிசை மாற்று திட்டம் மூலம் திருப்பூர், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டு 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இவ்வாறு மக்களின் தேவை அறிந்து அதனை நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே